அரியலூர்

"மழை நீர் சேகரிப்பு  அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்'

16th Aug 2019 08:58 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர் டி.ஜி. வினய்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இவற்றில் பெரியநாகலூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர்  பேசியது: 
குடிநீரைச் சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் கழிப்பதை தவிர்த்து கழிவறையை பயன்படுத்த வேண்டும். மானியத்தில் கழிவறை கட்டிக்கொடுக்கப்படுவதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீர்நிலைகளை பாதுகாப்பது அனைவரின் கடமை. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கிராமங்களிலும் மழைநீர் அமைப்பை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர். 
கூட்டத்தில் பொது செலவினம், 2019-2020 ஆம் நிதியாண்டு வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை,  ஜல்சக்தி இயக்கத்தை மாபெரும் இயக்கமாகச் செயல்படுத்துவது, முழு சுகாதாரம், முன்னோடி  தமிழகம் திட்டச் செயல்பாடுகள், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் தயாரித்தல், வேலை உறுதித் திட்ட பணிகள், மகளிர் திட்டம்- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க  பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானம் இயற்றப்பட்டது.
 ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிச்சாமி, சுகதாரப் பணிகள் துணை இயக்குநர் வீ.சி. ஹேமசந்த்காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்...ஜயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி,திருமானூர் அடுத்த கீழகாவட்டாங்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புதுக்குடி தெற்கு காரைமேடு கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பூமியில் துளையிட்டு எடுக்கும் எந்த ஒரு செயல் திட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
புதுக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சி செயலர் மாயகிருஷ்ணன் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். 
விஏஓ  சத்யா முன்னிலை வகித்தார்.100 நாள் வேலை திட்ட பணி தல பொறுப்பாளர் சங்கீதா,அங்கன்வாடி விற்பனையாளர் ராமகிஷ்ணன்,காரைமேடு பூபதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள்,கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT