அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே மணக்குடையான் கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரவு நேரத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. வெள்ளாற்றில் இரவு நேரத்தில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மணக்குடையான், தாமரைப்பூண்டி, சோழன்பட்டி, இருங்களாக்குறிச்சி, மாராக்குறிச்சி கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மனித உரிமை கழக மாநில துணைச் செயலர் கலியபெருமாள் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி பாலசிங்கம் முன்னிலை வகித்தார்.