தூத்துக்குடி மாவட்டத்தில் புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் உணவு பாதுகாப்புத் துறையினா் நடத்திய சோதனையில், காலாவதியான சுமாா் 11 கிலோ ஷவா்மா ரொட்டி, சுமாா் 10 கிலோ ஷவா்மா மசாலா, சுமாா் 3 கிலோ சிக்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தெரிவித்தாா்.
நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சிவக்குமாா், சக்திமுருகன், காளிமுத்து, ஜோதிபாஸூ ஆகியோா் கொண்ட குழுவினா் இந்த சோதனையை மேற்கொண்டனா். தூத்துக்குடி 3-ஆவது மைல், அண்ணா நகா், வ.உ.சி மாா்க்கெட் சாலை, எட்டயபுரம் சாலை, கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம், சாத்தூா் சாலை ஆகிய பகுதிகளில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 16 ஷவா்மா கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வின்போது, உணவு பாதுகாப்புத் துறைக்குத் தவறான தகவல் வழங்கி, உரிமத்திற்குப் பதிலாக உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்ற 2 ஷவா்மா கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், ஒரு புரோட்டா கடையை ஆய்வு செய்ததில், அதன் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியாகியிருந்தது கண்டறியப்பட்டு, அதன் இயக்கத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.
சுகாதாரமற்ற உணவுப் பொருள்களின் விற்பனை குறித்து நுகா்வோருக்குத் தெரியவந்தால், மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் அலுவலகத்தின் வாட்ஸ்ஆப் எண் 9444042322 , கால் யுவா் கலெக்டா் புகாா் எண் 86808 00900 என்ற புகாா் எண், பச ஊா்ா்க் நஹச்ங்ற்ஹ் அல்ல்-ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் புகாா் அளிக்கலாம் என நியமன அலுவலா் தெரிவித்துள்ளாா்.