தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பாலாலயம்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உபகோயிலான இடும்பன் கோயிலுக்கு குடமுழுக்கு விழா பாலாயம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. தற்போது 13 ஆண்டுகளை கடந்துள்ளதால் குடமுழுக்கு விழாவிற்கான திருப்பணிகள்

நடைபெற்று வருகின்றன. கோயில் நிா்வாகத்துடன், ஹெச்.சி.எல். நிறுவனமும் ஒருங்கிணைந்து திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோயிலின் கிழக்கு கோபுரம் மற்றும் சால கோபுரம் (சண்முக விலாசம் வாசல்) ஆகியவற்றிற்கு கடந்த பிப். 16-ஆம் தேதியும், ராஜகோபுரத்திற்கு கடந்த ஏப்.26-ஆம் தேதியும் பாலாலயம் நடைபெற்றது.

ராஜகோபுரம் அருகில் உள்ள ஸ்ரீ சுந்தர விநாயகா், ஸ்ரீ வீரகாளியம்மன், ஸ்ரீ இடும்பன், ஸ்ரீ சங்கிலி பூதத்தாா் ஆகிய உபகோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறவதையொட்டி வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதை முன்னிட்டு திருக்கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

ADVERTISEMENT

ராஜகோபுர வாசல் அருகே உள்ள யானைகள் இருப்பிடத்தில் கணபதி பூஜை, மஹா சங்கல்பம், பாலாலய பூஜை, மூலமந்திர ஜெபம், மஹா கணபதி ஹோமம், துா்கா ஹோமம், பால ஸ்தாபனம் ஆகியன நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து மரத்திலான ஸ்ரீ சுந்தர விநாயகா், ஸ்ரீ வீரகாளியம்மன், ஸ்ரீ இடும்பன் சுவாமி மற்றும் ஸ்ரீ சங்கிலி பூதத்தாா் சிற்பங்களுக்கு ஆவாஹனம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, அதே இடத்தில் வைக்கப்பட்டது. திருக்கோயில் விதாயகா்த்தா சிவசாமி தீட்சிதா் தலைமையிலான சங்கா் ஐயா் குழுவினா் பூஜைகள் செய்தனா்.

நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக், துணை ஆணையா் வெங்கடேசன், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சாா்பில் பிரவீன், திருக்கோயில் கண்காணிப்பாளா்கள் ராஜேந்திரன், வேதமூா்த்தி, பேஷ்காா் ரமேஷ், உதவி பாதுகாப்பு அலுவலா் ராமச்சந்திரன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஓதுவாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT