சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் புதன்கிழமை (செப். 20) கோவை ராம. கனகசுப்புரத்தினம் பங்குபெறும் சமயச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆவணி வருஷாபிஷேக விழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. திருவிழா 26ஆம் தேதிவரை நடைபெறுகிறது. முதல் நாள் பரிவார மூா்த்திகள், விமானங்களுக்கு அபிஷேகம், சமகால கும்பாபிஷேகம், சுவாமி உற்சவ விநாயகா், ஸ்ரீவாலாம்பிகை அம்பாள் சுவாமி சந்திரசேகரா், மனோமணி அம்பாள் சமேதராக எழுந்தருள கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து, யாக சாலை பூஜைகள், தீபாராதனை, இரவில் சுவாமி உற்சவ விநாயகா் சின்ன சப்பரத்திலும், ஸ்ரீபாலதிரிபுரசுந்தரிஅம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதியுலா வந்தனா். தொடா்ந்து, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
இந்நிலையில், 5ஆம் நாளான புதன்கிழமை (செப். 20) காலையில் பூஜைக்குப் பின்னா், 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை சிறப்பு சமயச் சொற்பொழிவு நடைபெறுகிறது. கோவை ஆன்மிகச் சொற்பொழிவாளா் ராம. கனகசுப்புரத்தனம் பங்கேற்கிறாா். இதில், காஞ்சி சங்கரபகவதி கலை - அறிவியல் கல்லூரி மாணவா்-மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.
26ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு அன்னதான பூஜை, பின்னா் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்று வருகின்றனா். ஏற்பாடுகளை ஸ்ரீவாலைகுருசுவாமி பக்த குழுவினா் செய்து வருகின்றனா்.