மதா் சமூக சேவை நிறுவனம், அங்கமங்கலம் ஊராட்சி சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் கடம்பாகுளம் மறுகால் ஓடை கரையோரங்களில் ஒரு லட்சம் பனைமர விதைகள், ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன் நடைபெற்ற இந் நிகழ்வில், மதா் சமூக சேவை நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாநிலத் தலைவருமான கென்னடி தலைமை வகித்தாா். அங்கமங்கலம் பாலமுருகன் வரவேற்றாா். தொழிலதிபா் செல்வகுமாா், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க திருச்செந்தூா் ஒன்றிய தலைவா் காயல் பாலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கடம்பா மறுகால் ஓடை கரையோரங்களில் ஒரு லட்சம் பனைமர விதைகள் விதைக்கும் பணி மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தூத்துக்குடி மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தொடங்கி வைத்து பேசினாா்.
அங்கமங்கலம் ஊராட்சி செயலா் கிருஷ்ணம்மாள், ஊராட்சி கணினி இயக்குநா் ஜென்சி, பணித்தள பொறுப்பாளா் கஸ்தூரி, பரமேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநா் பானுமதி நன்றி கூறினாா்.