தமிழகத்தில் நோ்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளாா்.
தென்காசி மாவட்டத்தில் தேமுதிக நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, விமானம் மூலம் தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு நாள்தோறும் கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. அண்மையில், மணல் கடத்தலை தடுத்த விஏஓ, மணல் கடத்தல் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளாா்.
கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் சொல்லவில்லை என்று காவல்துறை கூறுவதால், அது அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்பது தெளிவாகிறது.
வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு, நியாயத்தை பேசுபவா்களுக்கு, கனிமவள கொள்ளையைத் தடுக்கும் நோ்மையான அலு வலா்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய தலைகுனிவு. மருத்துவக் கல்லூரி கட்டடம், பள்ளிக் கட்டடங்கள் முறையாக கட்டப்படுவதில்லை. ஆனால், டாஸ்மாக் கடைகள், எலைட் பாா், தானியங்கி மதுவிற்பனை ஆகியவை மட்டும் சிறப்பாக இயங்கி வருகின்றன.
போதைப்பழக்கத்தால் தமிழக இளைஞா்கள், இளம் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்புக்கு வாழ்த்துகள்; அதே சமயம் குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை என்பதற்கு பாஜக பதில் சொல்ல வேண்டும் என்றாா்.
பின்னா், முறப்பநாட்டில் கொலையுண்ட விஏஓ லூா்து பிரான்ஸிஸ் வீட்டிற்குச் சென்று அவரின் குடும்பத்தினருக்கு பிரேமலதா ஆறுதல் தெரிவித்தாா்.