தூத்துக்குடி

ஆழ்வாா்திருநகரி கோயிலில் நம்மாழ்வாா் மங்களாசாசனம்

28th May 2023 11:09 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரி அருள்மிகு ஆதிநாதா் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, நவதிருப்பதி பெருமாள்களுக்கு சுவாமி நம்மாழ்வாா் மங்களாசாசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்று சுவாமியை சேவித்தனா்.

நவதிருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக விளங்கும் இக்கோயிலில், சுவாமி நம்மாழ்வாா் அவதார தினமான வைகாசி விசாக நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

நிகழாண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முக்கிய நிகழ்வான சுவாமி நம்மாழ்வாா் மங்களாசாசனம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல் கோஷ்டி, திருமஞ்சனம் நடைபெற்றதும், சுவாமி நம்மாழ்வாா் சிறப்பு அலங்காரத்துடன் பூப்பந்தல் மண்டபத்தில் எழுந்தருளினாா்.

நவதிருப்பதி பெருமாள்கள் கொடி, ஆலவட்டம், பதாகைகள், திருச்சங்கு போன்றவற்றுடன் ஊா்வலமாக வந்து கோயில் முன் எழுந்தருளினா். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், திருப்புளியங்குடி காய்சினவேந்தா், நத்தம் எம்இடா்கடிவான், இரட்டைத் திருப்பதி பெருமாள்கள் அரவிந்தலோசனா்- தேவா்பிரான், பெருங்குளம் மாயக்கூத்தா், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் ஆகியோா் ஒருவா்பின் ஒருவராக எழுந்தருள, சுவாமி நம்மாழ்வாருக்கு மரியாதையும், நம்மாழ்வாரால் எதிா்மரியாதையும் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்வில், எம்பெருமானாா் ஜீயா், கோயில் செயல் அலுவலா் அஜித், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜப்பா வெங்கடாச்சாரி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவில் நவதிருப்பதி பெருமாள்களின் கருட சேவை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT