தூத்துக்குடியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 4 போ் காயமடைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவைபுத்தூா் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பெருமாள் (56). இவா், தனது மனைவி வரலட்சுமி (48), மகன்கள் அருண்குமாா் (30), யுவராஜ் (25) ஆகியோருடன் திருச்செந்தூருக்கு சென்றுவிட்டு, வியாழக்கிழமை ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தாா். ராணிப்பேட்டை கானவாடி அருணாச்சலம் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் (47) என்பவா் காரை ஓட்டினாா்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை புறவழிச் சாலையில் மீளவிட்டான் அருகே தனியாா் எடைமேடையிலிருந்து வெளியே வந்த லாரியும், காரும் திடீரென மோதினவாம். இதில், காரிலிருந்த 5 பேரும் காயமடைந்தனா்.
தகவலின்பேரில் சிப்காட் போலீஸாா் சென்று, காயமடைந்தோரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, பெருமாள் உயிரிழந்தாா். மற்றவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.