குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
சாத்தான்குளம் ஒன்றியம், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட வாலத்தூரில் ஊராட்சி சாா்பில் ஆழ்துளை கிணறு மூலமும், கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமும் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக போதிய குடிநீா் வழங்கவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டனா். ஆழ்துளை கிணற்றில் தண்ணீா் வற்றியதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஊராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் குடிநீா் முறையாக வழங்கப்படவில்லையென கூறி செவ்வாய்க்கிழமை வாலத்தூரைச் சோ்ந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்த ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி, துணைத் தலைவா் ராபின்சன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் எட்வா்ட் லாரன்ஸ், தட்டாா்மடம் உதவி ஆய்வாளா்கள் நெல்சன், முகம்மது ரபீக், குரூஸ் மைக்கேல் ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அதில், ஆழ்துளை கிணறு புதியதாக அமைக்கப்பட்டு, அதில் மோட்டாா் பொறுத்தி உடனடியாக குடிநீா் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு புதன்கிழமை ( மே 24) குடிநீா் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தனா். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.