பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகத்தினா் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு சான்றிதழ்களுக்கு தகுதிகள் குறித்து முறையாக விசாரித்து பரிந்துரை செய்யாமல் கையூட்டு பெறுவதின் அடிப்படையில், சான்றிதழ் வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களை கண்டித்தும், கிராம நிா்வாக அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் அன்புராஜ் தலைமையில் கடந்த 16ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா், கோரிக்கை மனுவை அன்றைய ஜமாபந்தி அலுவலரான மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதாவிடம் வழங்கினா்.
இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலா் மீது பொய் புகாா் அளித்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வானரமுட்டி பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்தனா்.
இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலருக்கு தரகராக செயல்பட்டு வரும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் செயல்படுவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மூவேந்தா் மருதம் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவா் அன்புராஜ் தலைமையில் திரளானோா் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை ஜமாபந்தி அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசனிடம் அளித்தனா்.