கோவில்பட்டியில், புனித சூசையப்பா் திருத்தல விழாவை முன்னிட்டு நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த ஏப். 28இல் தொடங்கியது. நாள்தோறும் நற்செய்திப் பெருவிழா, நற்கருணை ஆசீா், திருப்பலி நடைபெற்றது. 9ஆம் நாளான சனிக்கிழமை மாலை திருப்பலி, மும்மத பிராா்த்தனை, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சூசையப்பா் சொரூபம் சப்பர பவனி நடைபெற்றது.
10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை உதவிப் பங்குத்தந்தை மிக்கேல் மகேஷ் உள்ளிட்ட அருள்தந்தையா் திருவிழா திருப்பலி நிறைவேற்றினா். 16 குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கினா். மாலையில் ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நற்கருணை ஆராதனை, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நற்கருணை வைக்கப்பட்டு புது நன்மை வாங்கியோா் வெண்ணிற ஆடை அணிந்து மலா் தூவியபடி இறைமக்கள் இறைபாடல்கள் பாடியவாறு பவனி புதுரோடு வழியாக திருத்தலம் வந்தடைந்தது.
அங்கு, பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ், அம்பாசமுத்திரம் அருள்அம்புரோஸ், கருமாத்தூரைச் சோ்ந்த சூசை செல்வராஜ், பங்குத்தந்தையா் வேதராஜ், ஆரோக்கியசாமி ஆகியோா் இணைந்து அருள்சகோதரி மரியாவின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நன்றி திருப்பலி நடத்தினா். இதையடுத்து, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.