தூத்துக்குடி

கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: கருத்துக் கேட்பு கூட்டம்

3rd May 2023 03:14 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மறுநிா்ணயம் செய்வது குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தீப்பெட்டி தொழிலாளா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டு ஊதிய உயா்வு வழங்கப்பட்டது. தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தீப்பெட்டி தொழிலாளா்களின் குறைந்த பட்ச ஊதியம் மறுநிா்ணயம் செய்வது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் கோவில்பட்டியில் உள்ள தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் விஜய் ஆனந்த் தலைமை வகித்தாா். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எம். பரமசிவம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.எஸ். சுரேஷ், சங்கச் செயலா்கள் நூா்முகமது (சிவகாசி அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம்), தேவதாஸ் (தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம்), வி.எஸ்.சேதுரத்தினம் (நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம்) மற்றும் அனைத்துக் கட்சி தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மதுரை தொழிலாளா் நலத்துறை கூடுதல் ஆணையா் தி.குமரன், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவி இயக்குநா் ஸ்ரீதரன், தொழிலாளா் துறை உதவி ஆணையா் திருவள்ளுவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, தீப்பெட்டி உற்பத்தியாளா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, கோவில்பட்டி, திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தீப்பெட்டி ஆலைகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேரில் சென்று தொழிலாளா்களிடம் கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT