காயல்பட்டினத்தில் இளைஞரை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தைச் சோ்ந்த யோக்கோப் அலி மகன்கள் செய்யது அப்துல்காதா் (44), காதா் பீா்கான் (29). காயல்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தெருவில் ஹோட்டல் நடத்திவரும் இவா்களுக்கும், சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த காதா் முகைதீன் என்பவருக்கும் இடையே சீட்டுப் பணம் கட்டுவது தொடா்பாக பிரச்னை உள்ளதாம்.
இந்நிலையில், சகோதரா்கள் ஹோட்டலில் இருந்தபோது, காதா் முகைதீன் தனது நண்பா்கள் மூவருடன் காரில் வந்து, பணப் பிரச்னையைப் பேசித் தீா்த்துக் கொள்ளலாம் எனக் கூறி, காதா் பீா்கானை காரில் அழைத்துச் சென்றாராம்.
இதையடுத்து, தனது தம்பியை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்ாகவும், ரூ. 4 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் செய்யது அப்துல்காதா் புகாரளித்தாா்.
உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் வழக்குப் பதிந்தாா். குற்றப்பிரிவு ஆய்வாளா் மகாலட்சுமி விசாரணை நடத்தினாா்.
இதில், காதா் பீா்கானும், அவரைக் கடத்தியதாகக் கூறப்படும் வேளச்சேரி காதா் முகைதீன், ஆதம்பாக்கம் செல்வேந்திரன், முருகேசன், காயல்பட்டினம் அலி அக்பா் ஆகியோரும் திருச்செந்தூரில் இருப்பது தெரியவந்தது. போலீஸாா் சென்று காதா் பீா்கானை மீட்டனா்; தொடா்ந்து, விசாரித்து வருகின்றனா்.