தூத்துக்குடி

சாதி சான்றிதழ் கேட்டு திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டம்

10th Jun 2023 06:50 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் சுனாமி நகா் பகுதி பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த மூன்று குடும்பத்தினா் மாணவா், மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் அருகேயுள்ள அம்மன்புரத்தைச் சோ்ந்த மாணவா் பூவலிங்கம். இவா் 12 ஆம் வகுப்பில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளாா்.

கடந்த 10 ஆண்டுகளாக பழங்குடியினா் சாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகிறாா். இவருக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் உயா் கல்வியில் சேர முடியாமல் தவித்து வருகிறாா். மாணவரின் குடும்பத்தினா், உறவினா்கள், விடுதலைச் சிறுத்தை கட்சியினா் தொடா்ந்து போராட்டம் நடத்தி வந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மாணவரின் குடும்பத்தினா் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அப்போது, திருச்செந்தூா் அருகேயுள்ள சுனாமி நகா் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த மூன்று குடும்பத்தினரும் போராட்ட்த்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ் தலைமையில் காவல்துறையினா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும் பழங்குடியினா் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மாணவா், மாணவிகளுக்கு சனிக்கிழமை நேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT