தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேருவதற்கான தேதி இம்மாதம் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூா், நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக, ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்ப தேதி இம்மாதம் 20ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள சோ்க்கை மையங்களின் பட்டியல், தொழிற் பிரிவுகள் விவரம் இந்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 50-ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோா் 8 அல்லது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், (2021இல் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பின் 9ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்), மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல், ஒரு நகலுடன் தூத்துக்குடி கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் (0461-2340133), வேப்பலோடை (0461-2267300), திருச்செந்தூா்(04639-242253), நாகலாபுரம் (9080585078), தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (0461-2340041) ஆகியவற்றில் நேரிலும் விண்ணப்பிக்கலாம்.
ஐடிஐ-யில் சேருவோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ. 750, கட்டணமில்லா பேருந்து பயண அட்டை பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி போன்ற பயிற்சிக்குத் தேவையான பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.