தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 74.44 கோடி கடன் தள்ளுபடி

8th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74.44 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுயசாா்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாவட்டத்தில் கடந்த மே மாதம் 2021 முதல் 2022 வரை மற்றும் 2022-2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 635 புதிய மகளிா் சுய உதவிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் கடந்த மே மாதம் வரை சுழல்நிதி கடனாக 516 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.77.40 லட்சம் , சமுதாய முதலீட்டு நிதியாக 796 குழுக்களுக்கு ரூ.661.80 கோடி, நலிவுற்ற தன்மை குறைப்பு நிதியின் கீழ், 154 பேருக்கு ரூ.38.50 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வங்கிக்கடன் இணைப்பு நிதியாக 26,623 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1390.05 கோடி வங்கி கடன் பெற்றுத் தரப்பட்டுள்ளது. வங்கி பெருங்கடன் வழங்குவதில் இதுவரை 49 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.1869.90 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2,420 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.74.44 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகா்ப்புற பகுதிகளில் 548 மகளிா் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிா் குழு உறுப்பினா்கள் சுய தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவிகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT