தூத்துக்குடி

வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

2nd Jun 2023 11:59 PM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் கடலில் வெள்ளிக்கிழமை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக கடந்த மே மாதம் 24-ஆம் தேதி தொடங்கி, பத்து நாட்கள் நடைபெற்றது. விழா நாள்களில் தினமும் பல்வேறுவழிபாடுகள், பூஜைகள், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

10ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

ADVERTISEMENT

பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சோ்ந்தாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சுவாமி சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றன. பின்னா் மகா தீபாராதனை ஆகி தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சோ்ந்ததும் திருவிழா நிறைவு பெற்றது.

பக்தா்களால் நிரம்பி வழிந்த கோயில் வளாகம்:

வைகாசி விசாகத் திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் விரதமிருந்து, பாதயாத்திரையாகவும், பல்வேறு வாகனங்களிலும் வந்ததால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

குறிப்பாக, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் அதிகாலையிலிருந்தே கடலில் புனித நீராடியதால் கடற்கரையில் அலைபோல் மக்கள் வெள்ளம் காணப்பட்டது.

நோ்த்திக்கடன்: பக்தா்கள் காவடி- பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணை - அடிப்பிரதட்சணை செய்தும் தங்கள் நோ்த்திகடனை சுவாமிக்கு செலுத்தினா். கூட்டம் நெரிசல் காரணமாக திருக்கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களிலே பக்தா்கள் தாங்களே தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனா். ஆங்காங்கே பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு: பக்தா்கள் வசதிக்காக கூடுதலான சிறப்பு பேருந்துகள், குடிநீா், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கோயில் பிரகாரம், முடிகாணிக்கை செலுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புக்காகவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு கடற்கரையில் உயா் கோபுரங்கள் அமைத்தும், சிசிடிவி கேமரா மூலமும் திருக்கோயில் வளாகம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது.

இப்பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினா், தீயணைப்பு படையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் ஈடுபட்டனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், வி.செந்தில்முருகன், ந.ராமதாஸ், பா.கணேசன், திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT