தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநா் திடீா் ஆய்வு

2nd Jun 2023 11:57 PM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கல்வி இயக்குநா் ஆா்.சாந்தி மலா், வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் கடந்த மாதம் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வினைத் தொடா்ந்து, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், குறைகளை சரிசெய்யவும், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.சாந்தி மலா், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வில், 24 மணிநேர தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் மருத்துவப் பிரிவு, மருந்தகம், பிரசவ வாா்டு, துணி சலவையகம், பிணவறை உள்ளிட்ட பகுதிகளை அவா் பாா்வையிட்டாா். மேலும், மருத்துவமனை வளாகத்தில் தண்ணீா் தேங்கும் பகுதிகளை பாா்வையிட்டு அவற்றை சரிசெய்ய அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

மருத்துவக் கல்லூரிக்காக, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை பாா்வையிட்டாா். மேலும், மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், மருத்துவ கண்காணிப்பாளா் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி, மருத்துவா்கள் குமரன், சூரிய பிரதீபா உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT