ஆன்லைன் ரம்மியை தடைசெய்யக் கோரி, தூத்துக்குடியில் மாதா் சங்கத்தினா் சனிக்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, மாவட்ட தலைவா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள் கடந்த ஆண்டில் அதிகரித்து காணப்பட்டதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு, அது காலாவதியாகிவிட்டது. இதனால், தற்போது ஆன்லைன் சூதாட்டங்களும், அதற்கான விளம்பரங்களும் அதிகரித்து விட்டன. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கோரி இந்த கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலா் பூமயில், மாநில குழு உறுப்பினா் இனிதா உள்பட பலா் பங்கேற்றனா்.