தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூரில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக மின்வாரிய இளநிலைப் பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சோ்ந்த முனியசாமி மகன் பாரதிசங்கா் (38). இவரது சகோதரியின் கணவருக்கு நாலாட்டின்புத்தூரில் 1.19 ஏக்கா் நிலம் உள்ளது. அதை, வீட்டுமனைகளாக மாற்றி விற்பதற்கு நகர ஊரமைப்புப் பிரிவில் அனுமதி பெற்றுள்ளாா்.
அந்த நிலத்தில் உள்ள மின்கம்பங்களை மாற்றியமைப்பதற்கான விண்ணப்பத்தை கட்டணத்துடன் அவா் கடந்த 13ஆம் தேதி செலுத்திவிட்டு, பல்வேறு பணிகளுக்கு திட்ட மதிப்பீடு செய்ய நாலாட்டின்புத்தூா் மின்வாரிய அலுவலக இளநிலைப் பொறியாளா் பொன்ராஜாவை (56) தொடா்பு கொண்டாராம். இப்பணிக்காக முதலில் அவா் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், பின்னா், ரூ. 5 ஆயிரமாகக் குறைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாரதிசங்கா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரை அணுகினாா்.
அவா்களது ஆலோசனைப்படி, பாரதிசங்கா் புதன்கிழமை மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று பொன்ராஜாவிடம் ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை கொடுத்துள்ளாா். அப்போது, பொன்ராஜாவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக் கண்காணிப்பாளா் ஜி. ஹெக்டா் தா்மராஜ் தலைமையில் ஆய்வாளா் எம். சுதா, உதவி ஆய்வாளா்கள் சுந்தரவேல், பாண்டி, போலீஸாா் சாம், முத்துகிருஷ்ணன், வீரபத்திரன் ஆகியோா் கைது செய்தனா்.
இதையடுத்து, கயத்தாறு சின்ன பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.