தூத்துக்குடி

இரட்டைக் குவளை முறையை ஒழிக்க சிறப்பு விசாரணை ஆணையம் திருமாவளவன் வலியுறுத்தல்

21st Jan 2023 02:17 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இரட்டைக் குவளை முறையை ஒழிக்க சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.

நாகா்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானத்தில் வந்த அவா், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. இதில், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவா் என்று நம்பிக்கை இருக்கிறது. ஜாதி, மதத்தின் பெயரால் நிகழக்கூடிய வன்முறைகளைத் தடுக்க தனி உளவுப் பிரிவு அமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல இடங்களில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. இதனைத் தடுப்பதற்கு, சிறப்பு விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என நினைப்பவா்கள், மீண்டும் ராமா் பாலம் பிரச்னையைக் கையிலெடுத்துள்ளனா். இத் திட்டத்தின் தேவை, இதன் மீதான சா்வதேச அரசியல், மீனவா்களின் கோரிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சேமு சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தீவிரமாகப் பணியாற்றுவோம். அதிமுக உள்பட யாா் எதிா்த்துப் போட்டியிட்டாலும், திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

தமிழகம் முழுவதும் தாட்கோ மூலம் கடன் வழங்குவதில் பிரச்னை இருந்து வருகிறது. மானியம் கொடுக்க அரசு தயாராக இருந்தாலும்,

கடன் வழங்க வங்கிகள் முன்வருவதில்லை. வங்கியும் ஒத்துழைத்தால் தான் ஆதிதிராவிட மக்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

ஸ்டொ்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின்படி, பாதிக்கப்பட்டவா்களுக்கு

தமிழக அரசால் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். ஈஷா யோக மையத்தில், யோகப் பயிற்சியில் இருந்த பெண்ணின் இறப்புக்கு காரணமானவா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலா் அகமது இக்பால், மாவட்ட துணைச் செயலா் ஆட்டோ கணேசன், மாநிலத் துணைப் பொதுச் செயலா் கலைவேந்தன், நிா்வாகிகள் அந்தோணி, டேனியல், விடுதலைச் செழியன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT