கடம்பூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கடம்பூரையடுத்த அயிரவன்பட்டி காலனித் தெருவைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் மனோஜ்குமாா்(23). கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியாா் டயா் கம்பெனியில் வேலை செய்து வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை ஒட்டநத்தத்தில் உள்ள உறவினா் வீட்டிற்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை அதிகாலை ஊருக்கு திரும்பினாராம். கல்லத்திகிணறு ஊருக்கு கிழக்கே உள்ள தனியாா் தோட்டத்திற்கு அருகே உள்ள வளைவில் இருந்த எச்சரிக்கை கம்பம் மற்றும் கல்லில் அவரது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கீழே விழுந்த முதியவா் பலி:
கடம்பூரில் கீழே விழுந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கடம்பூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் காளியப்பன்(82). இவா் இம்மாதம் 9ஆம் தேதி கடம்பூா் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்தாராம். அதையடுத்து அவா் கடம்பூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.