கோவில்பட்டியில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வடநாட்டு கைப்பேசி வியாபாரிகள் சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுவதை தடுக்கக் கோரி நகர கைப்பேசி உரிமையாளா் நலச் சங்கத்தினா் கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவா் ராதாகிருஷ்ணன், மாநில இணைச் செயலா் வெங்கடேஸ்வரன் ஆகியோா் தலைமையில், நகர கைப்பேசி உரிமையாளா் நலச்சங்கத் தலைவா் சோலையப்பன், செயலா் அமா்நாத், பொருளாளா் குருசாமி பாண்டியன் உள்பட திரளானோா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷிடம் மனு அளித்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மொத்த வியாபாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.