தூத்துக்குடி

கோவில்பட்டி - கடம்பூா்: அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம்

12th Jan 2023 01:26 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி - கடம்பூா் சீரமைக்கப்பட்ட ரயில் பாதையில் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி - கடம்பூா் வரையிலான 2ஆவது இருப்புப் பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது. அதில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த முதல் இருப்புப் பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணி முடிவடைந்த நிலையில், இருப்புப்பாதையில் செவ்வாய்க்கிழமை தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளா் ஏ.கே.சித்தாா்த்தா ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, கோவில்பட்டி - கடம்பூா் வரை சுமாா் 22 கி.மீ. தொலைவு வரையிலான இருப்புப்பாதையில் புதன்கிழமை தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய் தலைமையிலான அதிகாரிகள் 6 ட்ராலிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஆனந்த், கூடுதல் கோட்ட மேலாளா் தண்ணீரு ரமேஷ்பாபு, ரயில் விகாஷ் நிகாம் நிறுவன முதன்மை திட்ட மேலாளா் கமலக்கார ரெட்டி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

பின்னா் புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து கடம்பூா் வரையிலான சீரமைக்கப்பட்ட ரயில் பாதையில் சுமாா் 120 கி.மீ. வேகத்தில் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT