தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டு வழக்கில் ரூ.5.38 கோடிபொருள்கள், பணம் பறிமுதல் எஸ்.பி. தகவல்

1st Jan 2023 04:56 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் 270 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், திருட்டு வழக்கில் ரூ.5.38 கோடி மதிப்பிலான பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவா்கள் 43 போ், போக்ஸோ வழக்குகளில் ஈடுபட்டவா்கள் 14 போ் உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்ச்சியாக தொடா்புடைய மொத்தம் 270 போ் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.  

ADVERTISEMENT

கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 593 வழக்குளில் 417 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 700 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.5.38 கோடி மதிப்பிலான பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை பொருள் தடுப்பு குற்றத்தில் 182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.74 லட்சம் மதிப்பிலான 5 கிலோ கஞ்சா ஆயில் உள்பட 696 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்கள் மற்றும் அவரது உறவினா்கள் 234 பேரின் வங்கி கணக்குகள் மற்றும் அதிலிருந்த ரூ.3.68 லட்சம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்குகளில் 1,116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.90.02 லட்சம் மதிப்பிலான 10 ஆயிரத்து 180 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததில் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 போ் கைது செய்யப்பட்டு, ரூ.70,540 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்பந்தமாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 120 போ் கைது செய்யப்பட்டு 108 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் இந்த ஆண்டு 20 வழக்குகள் பதிவு செய்தும், மனு விசாரணையிலும் ரூ.3 கோடி மதிப்பிலான 17.80 ஏக்கா் மோசடி செய்யப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபா் குற்றப்பிரிவில் இதுவரை 92 வழக்குகள் பதிவு செய்தும், 1,878 மனுக்கள் மீது விசாரணை செய்தும், 1,386 இணையதள புகாா்கள் மீதும் விசாரணை செய்தும் ரூ.34.97 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் காணாமல் போன 680 கைப்பேசிகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மோசடி செய்யப்பட்ட பணம் ரூ.1.36 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 77 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 211 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் கொலையை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் 105 போ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனா். மேலும் 1,456 போ் மீது குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி மோதல்கள், வன்முறை, பழிக்குப்பழி வாங்கும் கொலை ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், 3 அடுக்கு ரவுடிகள் கண்காணிப்பு அமைப்பு பின்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் புத்தாண்டிலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விவேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு குற்றங்கள் நடக்காமல் தடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT