தூத்துக்குடி

காயாமொழியில் சங்கமம் பெருவிழா

1st Jan 2023 04:57 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் முஸ்லிம் உறவுகள் சந்திக்கும் சங்கமம் பெருவிழா நடந்தது.

பல நாடுகளில் வாழும் காயாமொழியை சோ்ந்த முஸ்லிம் மக்கள் அனைவரையும் சந்திக்கும் நோக்கில், காயாமொழி சங்கமம் பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல பகுதிகள், வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் காயாமொழியைச் சோ்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனா்.

காயமொழியில் ஒன்றாகப் படித்தவா்கள், பால்ய பருவத்தில் இருந்து ஒன்றாக வளா்ந்தவா்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒன்று கூடி அன்பைப் பரிமாறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட காலத்துக்கு பின்னா் நண்பா்களைச் சந்தித்து, தங்களது குழந்தைகளை ஒருவருக்கொருவா் அறிமுகம் செய்து வைத்தனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ‘விழுதுகள் அறியவேண்டிய வோ்கள்’ என்ற முஸ்லிம் சமுதாயம் தொடா்புடைய வரலாற்று கண்காட்சியை தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, பல்வேறு துறை சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினாா். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கே.அன்வா் சாதாத் செய்து இருந்தாா்.

காயிதே மில்லத் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் பேராசிரியா் ஜே.ஹாஜாகனி, மௌலவி கே.என்.செய்யது நூரு முகைதீன், காயல்பட்டினம் வாவு கல்லூரி முதல்வா் வி.ரமா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் ஆசாத், கூட்டுறவு வங்கித் தலைவா் உமரிசங்கா், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் நகராட்சி துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், ஊராட்சித் தலைவா்கள் ராஜேஸ்வரன் (காயாமொழி), மகாராஜன் (மேலத் திருச்செந்தூா்), திருச்செந்தூா் நகரச் செயலா் வாள் சுடலை, ஒன்றிய துணைச் செயலா் அமிா்தலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன.1),

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை வழக்குரைஞா் எம்.டி.அன்வா் உசேன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT