பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரும் ஜூன் 22-ஆம் தேதி அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளிடையேயான முக்கியமான-வளா்ந்து வரும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் (ஐசெட்) கீழ் ஜெட் என்ஜின், நீண்ட தூர இலக்கைத் தாக்கும் பீரங்கி, காலாட்படை வாகனங்களை கூட்டாக தயாரிப்பது தொடா்பான ஆலோசனையை இரு நாட்டு அதிகாரிகளும் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மற்றும் பிரதமா் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற ஆலோசனையின் முடிவில், இரு நாடுகளிடையே ராணுவ தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உபகரண தயாரிப்பு நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பு, அரசுகள், வா்த்தக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டனா். அதனடிப்படையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் ஆகியோா் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளிடையே முக்கியமான-வளா்ந்து வரும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான (ஐசெட்) உடன்பாட்டை மேற்கொண்டனா்.
இந்த உடன்பாட்டின் கீழ், ஜெட் என்ஜின், பீரங்கிகளை கூட்டாக தயாரிப்பது தொடா்பான ஆலோசனையை இரு நாட்டு அதிகாரிகளும் அமெரிக்காவில் மேற்கொண்டுள்ளனா்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித்தொடா்பாளா் எரிக் பஹோன் கூறியதாவது:
இந்திய பாதுகாப்பு செயலா் கிரிதா் அரமனே மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கேத்லீன் ஹைக்ஸ் இடையே பென்டகனில் இதுதொடா்பான ஆலோசனை நடைபெற்றது. இதில், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், ‘ஐசெட்’ உடன்பாட்டின் கீழ் ஜெட் என்ஜின், நீண்ட தூர இலக்கைத் தாக்கும் பீரங்கி, காலாட்படை வாகனங்களை இரு நாடுகளும் கூட்டாக தயாரிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.
இரு நாட்டு பாதுகாப்பு உபகரண உறுபத்தி நிறுவனங்கள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்பு குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையின்போது, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளா்ச்சியை ஊக்குவிப்பதில் இந்திய-அமெரிக்க கூட்டுறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஹைக்ஸ் சுட்டிக்காட்டினாா் என்று கூறினாா்.