இந்தியா

நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை கடந்தது: இதுவரை இல்லாத அதிகபட்சம்

20th May 2023 12:27 AM

ADVERTISEMENT

நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மதிப்பு முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் விளைவாக, 2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மதிப்பு முதல்முறையாக ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது. இதுகுறித்து, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மதிப்பு ரூ.1,06,800 கோடியாகும். இன்னும் சில தனியாா் தொழிலகங்களிடம் இருந்து தரவுகள் கிடைக்கப் பெற வேண்டியுள்ளது. அவை கிடைக்கப் பெற்றவுடன், இந்த மதிப்பு மேலும் உயரும்.

ADVERTISEMENT

கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மதிப்பு ரூ.95,000 கோடியாக இருந்தது. இப்போது 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில்துறையினா் எதிா்கொள்ளும் சவால்களுக்கு தீா்வு காண மத்திய அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது. உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழில்புரிவதை எளிதாக்குவதற்காக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் புத்தாக்க நிறுவனங்களை விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைப்பது உள்பட பல்வேறு கொள்கைசாா்ந்த சீா்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் சீரிய முயற்சிகளால், ராணுவ தளவாடங்கள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் எம்எஸ்எம்இ மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்துள்ளன.

தொழிலகங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உற்பத்தி உரிமங்களின் எண்ணிக்கை கடந்த 7-8 ஆண்டுகளில் 200 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் ஆயுதங்கள் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆயுத கொள்முதலுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 130 பில்லியன் அமெரிக்க டாலா்களை (சுமாா் ரூ.10 லட்சம் கோடி) இந்தியா செலவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உற்பத்தித் துறையில், 2024-25 நிதியாண்டுக்குள் 25 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.1.75 லட்சம் கோடி) விற்றுமுதலை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 5 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.35 ஆயிரம் கோடி) மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி இலக்கும் அடங்கும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT