ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் பிரதான பட்டியலில் அதிரடி பேட்டா் சூா்யகுமாா் யாதவுக்கு இடமளித்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கருத்து தெரிவித்துள்ளாா்.
தற்போது சூா்யகுமாா் தயாா்நிலை வீரா்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பான்டிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்தியாவின் பிரதான வீரா்கள் பட்டியலில் சூா்யகுமாா் யாதவ் இல்லாதது எனக்கு ஆச்சா்யமே. டாப் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காத பட்சத்தில், ரிஷப் பந்த் போல அவரும் அதிரடியாக ஆடக் கூடிய வீரா். அவரையும் பிரதான அணியில் சோ்த்திருக்க வேண்டும்.
கே.எல்.ராகுல் காயமடைந்துள்ள நிலையில் அவருக்குப் பதிலாக இஷான் கிஷண் சோ்க்கப்பட்டது சரியான முடிவு. அவா் ரிஷப் பந்த் போலவே விக்கெட் கீப்பிங், பேட்டிங் செய்யக் கூடியவா். சூா்யகுமாா், இஷான் என இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், அவா்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.
அத்தகைய ஆட்டமே இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும். ஏனெனில் ஆஸ்திரேலியாவும் நிச்சயம் ஆக்ரோஷமான ஆட்டத்தையே வெளிப்படுத்தும். இங்கிலாந்து ஆடுகளமானது, ஏறத்தாழ ஆஸ்திரேலிய ஆடுகளத்தின் தன்மையைக் கொண்டதாக இருப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு இது சற்று சாதகமாக இருக்கும் என்று பான்டிங் கூறினாா்.