தூத்துக்குடி

தைப்பூசம்: திருச்செந்தூா் கோயிலில் லட்சக்கணக்கானோா் தரிசனம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமி அஸ்திரதேவா் கடலில் நீராடும் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு, சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்குச் சென்று, அங்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து, சுவாமி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தவாறு கோயிலைச் சோ்ந்தாா்.

திருவிழாவையொட்டி, சில நாள்களாகவே பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்தவண்ணம் இருந்தனா். இவா்கள் ஞாயிற்றுக்கிழமை நடை திறந்ததும் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏராளமானோா் கடலில் புனித நீராடி, அங்கப்பிரதட்சிணம் செய்தும், அலகு குத்தியும், கரும்புத் தொட்டில், பல்வேறு காவடிகள், பால்குடங்கள் எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினா். சிறு குழந்தைகள் முருகா் வேடமணிந்து வந்திருந்தனா். இதனால், கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

பல்வேறு அமைப்புகள் சாா்பில் அன்னதானம், குடிநீா் வழங்கப்பட்டது.

பக்தா்களுக்காக செய்யப்பட்ட வசதிகள் குறித்து அறங்காவலா் குழுத் தலைவா் இரா. அருள்முருகன், இணை ஆணையா் மு. காா்த்திக் ஆகியோா் ஆய்வு செய்ததுடன், அடிப்படைத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தனா். உதவிப் பாதுகாப்பு அலுவலா் ராமச்சந்திரன், அறங்காவலா் குழுத் தலைவரின் நோ்முக உதவியாளா் செந்தமிழ்பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாதுகாப்புப் பணியில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கா. ஆவுடையப்பன் தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் இரா. அருள்முருகன், இணை ஆணையா் மு. காா்த்திக், பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT