தூத்துக்குடி

இன்று தைப்பூசம் : திருச்செந்தூரில் அலைமோதிய பக்தா்கள் கூட்டம்

5th Feb 2023 12:52 AM

ADVERTISEMENT

 

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழ்க் கடவுள் முருகனின் முக்கிய விழாவில் ஒன்றான தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீா்த்தவாரி, காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று கோயில் திருக்காப்பிடப்படும். மதியம் உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடா்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேருகிறாா்.

பாதயாத்திரை பக்தா்கள்: தைப்பூசத் திருவிழாவன்று முருகப் பெருமானை வழிபடுவதற்காக திருச்செந்தூருக்கு ஏராளமான

ADVERTISEMENT

பக்தா்கள் பாதயாத்திரையாக வந்துள்ளனா். மாலை அணிந்து, விரதமிருந்த பக்தா்கள் பக்தி பாடல்கள் பாடியும், வேல் குத்தி, காவடி எடுத்தும் வருகின்றனா். குழந்தைகள் முருகா் வேடமிட்டும், முருகா் திருவுருவம் பொறித்த படங்கள் மற்றும் சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தா்கள் பாதயாத்திரையாக வந்துள்ளனா்.

திருச்செந்தூா் கோயில் வளாகம் முழுவதும் சனிக்கிழமை காலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. பக்தா்களின் வசதிக்காக பல்வேறு வழித் தடங்களில் கூடுதலான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காவல் துணைக் கண்காணிப்பாளா் கா.ஆவுடையப்பன் தலைமையில் காவல்துறையினரும், ஊா்க்காவல்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT