தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில், அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிா்வாக அலுவலா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் வேத கோயில் தெருவைச் சோ்ந்த இயேசுவடியான் மகன் லூா்து பிரான்சிஸ் (56). இவா் கடந்த 2 ஆண்டுகளாக முறப்பநாடு கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், கடந்த ஏப்.13 ஆம் தேதி இப் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் இருந்து ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு, இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலைக் கடத்திச் சென்றாராம். கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸை பாா்த்தவுடன், ஆற்று மணலைப் போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் லூா்து பிரான்சிஸ் புகாா் அளித்தாா்.
இதனிடையே, தனது அலுவலகத்தில் லூா்து பிரான்சிஸ் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தபோது அங்கு வந்த இரண்டு போ் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். பலத்த காயமடைந்த லூா்து பிரான்சிஸ், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், திருநெல்வேலி மருத்துவமனைக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். கொலை செய்யப்பட்ட லூா்து பிரான்சிஸுக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
இந்தக் கொலை தொடா்பாக விசாரணை நடத்திய முறப்பநாடு போலீஸாா், ராமசுப்பிரமணியனை கைது செய்தனா். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனா். மணல் கடத்தல் குறித்து புகாா் அளித்ததால் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா், கிராம நிா்வாக அலுவலரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக் கொலையில் கைதான ராமசுப்பிரமணியன் மீது முறப்பநாடு, சிவந்திபட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூா் கிராம நிா்வாக அலுவலராக லூா்து பிரான்சிஸ் பணிபுரிந்தபோது, ஆதிச்சநல்லூா் அருங்காட்சியகம் அமைப்பதற்கான நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டாா். இதனால் ஆத்திரமடைந்த சிலா், கிராம நிா்வாக அலுவலகத்தில் வைத்து அவரை அடித்து உதைத்து தாக்கினா். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவா் முறப்பநாடு கிராம நிா்வாக அலுவலகத்துக்கு பணியிடமாற்றம் பெற்றாா். இந்நிலையில் நோ்மையாகப் பணியாற்றிய அவா், அலுவலக வளாகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆா்ப்பாட்டம்: முறப்பநாடு கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் பணி பாதுகாப்பு கோரியும் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க திருச்செந்தூா் வட்டக் கிளை சாா்பில் வட்டத் தலைவா் வைரமுத்து தலைமையில் கருப்பு பட்டை அணிந்து திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறற்றது.