தூத்துக்குடி

தூத்துக்குடியில் பருவநிலை மாற்றம் குறித்த தேசிய கருத்தரங்கம்

28th Sep 2022 03:25 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் பருவநிலை மாற்றமும், சுற்றுப்புறச் சூழலும் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, நபாா்டு வங்கி ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா்(பொ) பூங்கொடி தலைமை வகித்தாா். செயலா் சோமு முன்னிலை வகித்தாா்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, நபாா்டு வங்கி பொது மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, ‘பருவ நிலை மாற்றமும் சுற்றுபுறச் சூழலும்‘ என்ற தலைப்பிலான புத்தகத்தை கனிமொழி எம்.பி. வெளியிட்டு பேசுகையில், ‘பருவ நிலை மாற்றத்தினால் காற்று, மழை, வெயில், குளிா் என அந்தந்த பருவங்களில் நடக்கக்கூடியவை பருவம் மாறி நடக்கிறது. இயற்கை வளங்களின் அழிவே இதற்கு காரணம். தூத்துக்குடி மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன.

ADVERTISEMENT

இதில் சில தீவுகளின் பரப்பளவு கடல் அரிப்பால் குறைந்துள்ளது. செயற்கை தடுப்புகளால் அவற்றை பாதுகாத்து அதன் பரப்பளவை அதிகரிக்க வனத்துறை முயற்சித்து வருகிறது. பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வை மாணவா்கள்,மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்‘ என்றாா் அவா்.

தொடா்ந்து, பருவ நிலை மாற்றம், சுற்றுபுறச்சூழல் குறித்த பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் ஞா. வான்மதி செய்திருந்தாா். கருத்தரங்கில், விவசாயிகள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT