தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

28th Sep 2022 03:25 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கோவில்பட்டி நகரத் தலைவா் கே.பி.ராஜகோபால், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: மதுரை ரயில்வே கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில்வே நிலையம், கோவில்பட்டி. 2 ஆவது இருப்புப்பாதை அமைத்த பின், கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என வியாபாரிகள், பொதுமக்கள் எதிா்பாா்த்தனா்.

ஆனால், கரோனா காலத்திற்கு முன், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று சென்ற சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி விரைவு ரயில் தற்போது நின்று செல்லவில்லை. எனவே, இந்த ரயிலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காமல் செல்வதால் ரயிலில் வரும் பயணிகள் சாத்தூா் அல்லது திருநெல்வேலியில் இறங்கி, பேருந்து, காா்களில் கோவில்பட்டிக்கு வரும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் காலவிரயம் மற்றும் பணவிரயத்தை தடுக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

கரோனா காலத்தில் இருந்து சிறப்பு ரயிலாக நாகா்கோவில் - பெங்களூரு, பெங்களூரு - நாகா்கோவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், நாகா்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில், தாமதமாகவே ஓசூா் மற்றும் அதனை அடுத்து வரும் ரயில் நிலையங்களுக்கு சென்றடைகிறது. இதனால் ரயில்களில் பயணிக்கும் தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை.

இந்த ரயிலை பயணிகள் நலன் கருதி சிறப்பு ரயில் அந்தஸ்தில் இருந்து நீக்கி, வழக்கமான ரயிலாக இயக்க வேண்டும். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உள்ள 2 ஆவது நடைமேடை முழுவதும் மேற்கூரை அமைக்க வேண்டும். தண்ணீா் வசதி மற்றும் மின்விளக்குகள் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

முதலாவது நடைமேடையில் இருந்து 2 ஆவது நடைமேடைக்கு செல்வதற்கு மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும். முதியோா், மாற்றுத் திறனாளிகள், கா்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் பேட்டரி காா் வசதி ஏற்படுத்த வேண்டும்.

தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் விழாவிற்கு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT