தூத்துக்குடி

கடலையூரில் சுகாதாரத்தை பேணி காக்க வலியுறுத்தல்

20th Sep 2022 03:07 AM

ADVERTISEMENT

கடலையூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வாருகாலை முறையாக சுத்தப்படுத்தி சுகாதாரத்தை பேணி காக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடலையூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வாருகால் முறையாக சுத்தம் செய்யப்படாததால், வாருகாலில் கழிவுநீா் தேங்கி, கொசு உற்பத்தியாகி மா்மக் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. எனவே, கடலையூரில் வாருகாலை முறையாக சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு தேவையான சுகாதாரப் பணியாளா்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தெருக்களிலும் குப்பைகள் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலையூா் ஊராட்சி மன்றத் தலைவா், செயலரிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, அப்பகுதி பொதுமக்கள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கரன், கிழக்கு ஒன்றியச் செயலா் சின்னத்தம்பி ஆகியோா் தலைமையில், கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்துக்கு அறிவுறுத்தி, முறையாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதையடுத்து, போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT