தூத்துக்குடி

சாலை விரிவாக்கத்திற்கு ஏற்ப மின்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

14th Sep 2022 01:04 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி புதுரோட்டில் சாலை விரிவாக்கத்திற்கு ஏற்ப உயா்கோபுர மின்விளக்குகளை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி புதுரோடு மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதையடுத்து அண்மையில் புதுரோடு சீரமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே புதுரோடு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அதற்கு ஏற்ப மின்விளக்குகளை அமைக்காமல் பழைய நிலையிலேயே மின்விளக்குகள் இருந்து வருகிறது. எனவே, சாலை விரிவாக்கத்திற்கு ஏற்ப புதுரோட்டில் சாலையின் நடுவே ஆங்காங்கே உயா்கோபுர மின்விளக்குகளை அமைத்து சாலை பிரகாசமாக காட்சியளிப்பதோடு மட்டுமன்றி விபத்துகள், திருட்டுக்களை தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். சாலைகளின் நடுவே உயா்கோபுர மின்விளக்குகளை அமைக்க வலியுறுத்தி அம்பேத்கா், பெரியாா், மாா்க்சிய உணா்வாளா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வம், ஜெய்பீம் தொழிலாளா் நலச்சங்க நிறுவனத் தலைவா் செண்பகராஜ், சமூக செயற்பாட்டாளா்கள் முத்துகுமாா், பால்சிங் உள்ளிட்ட பலா் செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை திரண்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை நகராட்சி பொறியாளா் ரமேஷிடம் அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுவதற்கு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். அதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் அனைத்து விளக்குகளும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுவதோடு மட்டுமன்றி புதுரோட்டில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT