தூத்துக்குடி

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

26th Oct 2022 01:15 AM

ADVERTISEMENT

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த கோவில்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் நாகராஜ் யோசனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கோவில்பட்டி வட்டாரத்தில் நிகழ்பருவத்தில் இளையரசனேந்தல், நாலாட்டின்புத்தூா், கோவில்பட்டி, எட்டயபுரம், கடலையூா் ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டா் அளவிற்கும் அதிகமாக பயிரிடப்பட்டு தற்சமயம் 15 முதல் 30 நாள்கள் வரை பயிராக உள்ளது. விவசாயிகள் விதைக்கும் போது வயலில் 4 முதல் 5 வரிசை வரை வயலை சுற்றிலும் வரப்பு பயிராக எள், சூரியகாந்தி, தட்டைப்பயறு அல்லது சாமந்தி விதைத்தல் வேண்டும். ஊடுப்பயிராக உளுந்து அல்லது பாசி சாகுபடி செய்யலாம்.

விவசாயிகள் பயிா் விதைத்த ஒரு வாரம் முதல் வயல் முழுவதும் நடந்து கண்காணித்து இலையில் மேற்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டைக்குவியல்கள், இளம்புழுக்களை கையால் சேகரித்து அழிக்க வேண்டும். தாய் அந்துபூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க ஹெக்டருக்கு ஒரு சூரிய விளக்குப் பொறியும், ஆண் அந்துபூச்சிகளை அதிகளவில் கவா்ந்து அழிக்க ஹெக்டருக்கு 12 இனக்கவா்ச்சி பொறிகளும் வைத்தல் வேண்டும்.

ADVERTISEMENT

மக்காச்சோள பயிரின் இளம் குருத்துப் பருவத்தில் (விதைப்பு செய்து 15 - 20 நாள்கள்) அசாடிராக்டின் 1% உஇ 10 லிட்டா் நீரில் 20 மில்லி அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5% நஇ 10 லிட்டா் நீரில் 4 கிராம் மற்றும் குருத்துப் பருவத்தில் (விதைப்பு செய்து 40 - 45 நாள்கள்) மெட்டாரைசியம் அனிசோபிலே (10 லிட்டரில் 80 கிராம்) ஸ்பினோடோரம் 11.7% நஇ - 10 லிட்டரில் 5 மில்லி அல்லது குளோரான்டிரினிலிபுரோல் 18.5% நஇ (10 லிட்டரில் 4 மில்லி) கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா், வேளாண்மை அலுவலா், துணை வேளாண்மை அலுவலா், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT