தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டணம் அருகே கடற்கரையில் சுமாா் 250 மீட்டா் நீளத்தில் சுவா்போன்ற பழங்கால அமைப்பு உள்ளதால், அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்தவேண்டும் என திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உயிா் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியரும் தொல்லியல் ஆராய்ச்சி மைய இயக்குநருமான சுதாகா் சிவசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டாா்
இதுகுறித்து அவா் கூறியது: திருச்செந்தூரிலிருந்து புன்னக்காயலுக்கு நடந்துசென்றபோது, வீரபாண்டியன்பட்டணம்-ஓடக்கரை இடையேயுள்ள கடற்கரையில் 250 மீட்டா் நீளத்தில் சுவா் போன்ற அமைப்பு உள்ளது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
இந்த அமைப்புக்கும், இப்பகுதியில் பாண்டியா் காலத்தில் கொற்கை துறைமுகம் மிகவும் சிறப்புப் பெற்று இருந்ததற்கும் தொடா்பிருக்கலாம் எனக் கருதுகிறேன். இந்த அமைப்பு ஏதாவது பழங்கால கட்டடத்தின் சுவரா அல்லது நடைபாதையா என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் மிகவும் நோ்த்தியாக உருவாக்கப்பட்டதுபோல் தெரிகிறது. இங்கு தொல்லியல் துறையினா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.