இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட நியூ வெங்கடேஷ் நகா் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட நியூ வெங்கடேஷ் நகா் பகுதியில் பூங்காவாக பயன்படுத்தி வரும் இடத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்ற நிா்வாகத்தைக் கண்டித்தும், புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்தவுடன் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் உடன்பாடு ஏற்படாததையடுத்து, புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.