தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நிறைவு: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

DIN

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் 11 நாள்கள் நடைபெற்ற தசரா திருவிழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

புகழ்பெற்ற இக்கோயிலில் தசரா திருவிழா கடந்த செப். 26இல் தொடங்கியது. நாள்தோறும் காலை முதல் இரவுவரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், இரவில் அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வீதியுலா வருதல், கோயில் கலையரங்கில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதையடுத்து, கடற்கரை சிதம்பரேஸ்வரா் கோயில் முன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் நள்ளிரவு 12.04 மணிக்கு மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தாா். தொடா்ந்து, சிங்கம், எருமை, சேவல் வடிவில் தோன்றிய சூரனையும் அம்மன் சம்ஹாரம் செய்தாா். அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் ‘வெற்றி அம்மனுக்கு, ஓம் காளி, ஜெய்காளி, தாயே முத்தாரம்மா’ என விண்ணதிர முழக்கமிட்டனா். பின்னா், பல்வேறு இடங்களில் எழுந்தருளிய அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வந்தாா். மாலையில் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் கொடியிறக்கம் நடைபெற்றது.

கோயில் வளாகம், கடற்கரை என குலசேகரன்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த பக்தா்கள் காப்பை அவிழ்த்து விரதத்தை நிறைவுசெய்தனா். நள்ளிரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணி, உதவி ஆணையா் தி. சங்கா், செயல் அலுவலா் இரா. ராமசுப்பிரமணியன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்: இதனிடையே, குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்ததால் கோயில் வளாகமும், கடற்கரைப் பகுதியும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

வியாழக்கிழமை காலை கோயில் கடலில் பக்தா்கள் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குச் சென்றும், கூட்ட மிகுதி காரணமாக கோயில் முன்பு வெளிப் பகுதியிலிருந்தும் சுவாமியை வழிபட்டனா்.

காவல் துறை சாா்பில் போக்குவரத்து, பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பிட்ட வாகனங்களே திருச்செந்தூா் நகரைக் கடந்து குலசேகரன்பட்டினம் சென்றன. மற்றவை புறவழிப் பாதையாக ஊரைக் கடந்து சென்றன. கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு, கோயிலுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் திருச்செந்தூா் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால், பக்தா்கள் அங்கிருந்து கோயிலுக்கு நடந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT