தூத்துக்குடி

தூத்துக்குடியில் வடமாநிலத் தொழிலாளா்கள் போராட்டம்

7th Oct 2022 01:13 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் வடமாநிலத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் இருந்த இடத்தில் சீா்மிகு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கட்டடப் பணியில் பெரும்பாலும் வடமாநிலத் தொழிலாளா்களே ஈடுபடுத்தப்படுகின்றனா். அவா்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என்றும், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்துதருவதில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

இந்நிலையில், முறையான ஊதியம் வழங்க வேண்டும், போதிய உணவு வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடமாநில கட்டடத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை பணிகளைப் புறக்கணித்தனா். பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு நிலவியது.

போராட்டம் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து சிமெண்ட், கல் உள்ளிட்ட பொருள்களை ஏற்றி வந்த லாரிகளிலிருந்து பொருள்களை இறக்க முடியாத நிலை நீடித்தது.

ADVERTISEMENT

மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள், தொழிலாளா்கள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தொழிலாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT