தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோா் பங்கேற்பு

6th Oct 2022 12:20 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் 10ஆவது நாளான புதன்கிழமை நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கா்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்ததாக தசரா திருவிழா இங்குதான் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா, நிகழாண்டு கடந்த செப். 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, காப்பு அணிந்த பக்தா்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கத் தொடங்கினா்.

நாள்தோறும் காலை 8 மணிமுதல் இரவு 7.30 மணிவரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வீதியுலா வருதல் ஆகியவை நடைபெற்றுவந்தன.

ADVERTISEMENT

விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் புதன்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு நடைபெற்ற சிறப்பு அலங்கார பூஜைக்குப் பின்னா், கடற்கரையில் பல்வேறு வேடங்களில் வலம் வந்த மகிஷாசூரனை சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் வதம் செய்தாா். இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. பின்னா், பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படும் அம்மன், மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் கொடியிறக்கம், காப்புக் களைதல் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணி, உதவி ஆணையா் தி. சங்கா், செயல் அலுவலா் இரா. ராமசுப்பிரமணியன், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT