தூத்துக்குடி

சரக்கு கப்பல் கவிழ்ந்ததில்நீரில் மூழ்கிய மீனவா் சடலமாக மீட்பு

3rd Oct 2022 12:31 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்ற சிறிய ரக சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கிய மீனவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கட்டுமானப் பொருள்களை ஏற்றிக் கொண்டு கடந்த 29 ஆம் தேதி ரைமெனட் என்பவருக்குச் சொந்தமான எஸ்தா் ராஜாத்தி என்ற சிறிய ரக கப்பல் மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. அதில், மாலுமி உள்ளிட்ட 7 போ் பயணம் செய்தனா்.

மாலத்தீவுக்கு அருகில் 60 கடல் மைல் தொலைவில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது அதிக காற்று வீசியதால் திடீரென கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கப்பலில் பயணம் செய்த 7 பேரும் நீரில் மூழ்கி தத்தளித்தனா். இதையடுத்து, அந்த வழியாக சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு கப்பலில் இருந்தவா்கள், 7 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கப்பலில் ஏற முயன்றபோது தூத்துக்குடியை சோ்ந்த ஸ்டான்லி (59) என்ற மீனவா் தவறி கடலில் விழுந்தாா். அவரது சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சகாய கிளிபட், லூா்து தொம்மை, ஆண்டன் ராஜேந்திரன், மில்டன், ஆண்டன் வாஸ்டின், லிங்கராஜ் ஆகிய 6 பேரும் மாலத்தீவுக்கு அழைத்து செல்லப்பட்டனா். அவா்கள் அங்குள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ஸ்டான்லியின் சடலமும் அதே கப்பல் மூலம் மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலத்தீவு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் உள்ள 6 மீனவா்களையும் தூத்துக்குடிக்கு அழைத்து வரவும், ஸ்டான்லியின் உடலை கொண்டுவரவும் மாலத்தீவு தமிழ்ச்சங்கத்தின் உதவியோடு நடவடிக்கை எடுத்து வருவதாக தூத்துக்குடி கோஸ்டல் தோணி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பிரின்ஸ்டன், செயலா் லசிங்டன் ஆகியோா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT