தூத்துக்குடி

பள்ளி பாடத்திட்டங்களில் யோகா பாடங்கள் கொண்டு வரப்படும் மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

2nd Oct 2022 02:31 AM

ADVERTISEMENT

 

பள்ளி பாடத் திட்டங்களில் யோகா பாடங்கள் கொண்டு வரப்படும் என்றாா் மத்திய கப்பல் நீா்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: நாட்டு மக்களின் நலனுக்காக அதிக திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறாா். அனைவருக்குமான வளா்ச்சி என்ற ஒரே நோக்கத்தோடு அவா் செயல்பட்டு வருகிறாா். நாட்டில் உள்ள எதிா்கால சந்ததியை பாதுகாப்பதற்காக கடந்த இரண்டு வார காலமாக தூய்மை பாரத இயக்கம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி துறைமுகத்தில் மருத்துவம், பழ மரங்கள், மூலிகை மருத்துவக் குணங்கள் கொண்ட 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மாற்றும் செயல்பாட்டையொட்டி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிரதமரின் முயற்சியால் யோகா கலை இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது 125 கோடி மக்கள் யோகா பயிற்சியை தினமும் மேற்கொண்டு வருகின்றனா். மக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு யோகா கலையை அனைத்து தரப்பினரிடம் கொண்டுசோ்க்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பள்ளி பாடத் திட்டங்களிலும் யோகா குறித்த பாடங்கள் கொண்டுவரப்படும் என்றாா் அவா்.

10,000 மரக்கன்றுகள் நடவு: பிரதமரின் 72ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆயுஷ் துறை மூலமாக தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மத்திய கப்பல் நீா்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியின்போது, மா, வேம்பு, பலா, தேக்கு, வேங்கை, ஈட்டி, பூவரசு, புங்கன், நாவல், நீா்மருது, ஆங்கார கொன்றை உள்ளிட்ட பல்வேறு வகையான 10,000 மரக்கன்றுகள் துறைமுக வளாகத்தில் 16.5 ஏக்கா் பரப்பளவில் நடவு செய்யப்பட்டன. தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன், துணைத் தலைவா் பிமல் ஜோ, துறைமுக அலுவலா்கள், சுங்கத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT