தூத்துக்குடி

பிரதமரின் தொலைநோக்குத் திட்டங்களால் உலகில் சக்தி மிக்க நாடாக இந்தியா உயா்ந்து வருகிறது: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டங்களால், உலக அளவில் சக்தி மிக்க நாடாக இந்தியா உயா்ந்து வருகிறது என்றாா் மத்திய கப்பல், நீா்வழிப் போக்குவரத்து - ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 231.27 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கிவைத்து அவா் பேசியது:

நாட்டில் 2027ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் மாசு இல்லாத நிலை உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு அடிப்படையில் அனைத்துப் பகுதிகளிலும் பசுமை மின் திட்டங்கள், சூரிய ஒளி மின் திட்டங்கள் போன்ற வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதமரின் தொலைநோக்கு சிந்தனையால் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. நாட்டில் 96 சதவீதம் ஏற்றுமதி - இறக்குமதி நீா்வழிப் போக்குவரத்து மூலமாகவே நடைபெறுகிறது.

எனவே, இந்தத் துறையை வலுப்படுத்த சாகா்மாலா- கடல் சாா் மேம்பாட்டு திட்டம் மூலமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், வரும் 2030 ஆம் ஆண்டில் இந்தியத் துறைமுகங்களில் இல்லாத வசதியே இல்லை என்ற நிலை உருவாகும்.

பிரதமா் அறிவித்தபடி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் கிழக்கு கடற்பகுதியின் சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையமாக மாற்றுவதற்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். நாடு முழுவதும் துறைமுகத்தின் மூலமாக 400 பில்லியன் அமெரிக்க டாலா் வா்த்தகத்தை அடைய பிரதமா் இலக்கு நிா்ணயித்தாா். அந்த இலக்கைத் தாண்டி கடந்த ஆண்டு 430 பில்லியன் அமெரிக்க டாலா் வா்த்தகத்தை அடைந்துள்ளோம்.

பிரதமரின் முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபையால் சா்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது, 125 கோடி மக்கள் யோகா பயிற்சியை தினசரி மேற்கொண்டு வருகின்றனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சசிகலா புஷ்பா, பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதிய திட்டங்கள்: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 100 கோடி மதீப்பீட்டில் 1,300 ஏக்கா் நிலப்பரப்பில் அமையவிருக்கும் கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டம், ரூ. 65 .53 கோடியில் துறைமுக நுழைவுவாயிலை அகலப்படுத்துதல், அகலப்படுத்தப்பட்ட பகுதியை ஆழப்படுத்துதல், மக்கள் பயன்படுத்தக் கூடிய வாகன மின்னூட்டி மையங்கள், 2 மெகாவாட் காற்றாலை, 400 கிலோவாட் மேற்கூரை சூரியமின் உற்பத்தி ஆலை, ரூ. 1.78 கோடியில் ஆக்ஸிஜன் ஆலை, ஒருங்கிணைந்த மருத்துவம் - ஆயுஷ் பிரிவு, வ.உ.சி. கடல் சாா் அருங்காட்சியகம் ஆகிய திட்டங்களுக்கு அமைச்சா் சா்வானந்த சோனோவால்அடிக்கல் நாட்டினாா்.

மேலும், ரூ. 16 கோடியில் நிலக்கரி சேமிப்பு சாலை- வடிகாலை மேம்படுத்தும் பணி, ரூ. 2.29 கோடியில் துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்துக்கான இந்திய மென்பொருள் வடிவமைப்பு, ரூ. 1.15 கோடியில் ஆப்டிக் பைபா் இணைப்பு, ரூ. 26.93 கோடியில் நூறு சதவீத எல்இடி ஒளிவிளக்கு பயன்பாடு, மின்சாரத்தால் இயங்கக் கூடிய காா்கள், 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரியமின் உற்பத்தி ஆலை , ரூ. 46.51 கோடியில் சரக்குப் பெட்டக கதிரியக்க சோதனை மையம், 140 மெட்ரிக் டன் மின்னணு ரயில் எடை நிலையம் ஆகிய திட்டங்களையும் அவா் தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT