தூத்துக்குடி

தூத்துக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு: கனிமொழி எம்பி தகவல்

27th Nov 2022 06:22 AM

ADVERTISEMENT

 

நிகழாண்டின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது என்று மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 30ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மக்களவை உறுப்பினா் கனிமொழி பேசியதாவது:

அடிப்படை அறிவியல் அறிவு இல்லையென்றால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. நாம் காணும் கனவுகளை நிறைவேற்ற அறிவியல் உதவுகிறது. சுமாா் 300 ஆண்டுகளுக்கு முன்பு

ADVERTISEMENT

ஒரு செய்தியை வெளியூா்களில் உள்ளவா்களுக்கு சொல்ல, ஒரு நபா் ஓடிச் சென்று வரவேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகத்தின் எந்த மூலைக்கும் உடனுக்குடன் செய்தியை அனுப்பலாம். நமது கைகளில் உள்ள கைப்பேசியில் ஒரே நொடியில் உலகத்தில் உள்ள அறிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

மாணவா்கள் முயற்சியில் தளராது, புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வேண்டும். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு நிகழாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான தேதி, இடம் பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.

பல்வேறு அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். மாணவா்-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டு பாராட்டினாா். அதைத் தொடா்ந்து இல்லம் தேடிக் கல்வித் திட்ட விழிப்புணா்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செ.சுரேஷ் பாண்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் க.பால தண்டாயுதபாணி, அரசுக் கல்லூரி முன்னாள் முதல்வா் பேராசிரியா் சந்திரகுமாரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ந.சகா்பான் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT