தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டொ்லைட் காப்பா் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா்கள் மகாஜன நிறுவனத் தலைவா் சந்திரன் ஜெயபால் வலியுறுத்தியுள்ளாா்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியது:
கரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீளவில்லை. பல வணிக நிறுவனங்கள், சிறு வேலை செய்பவா்கள் அனைவரும் பண இழப்பாலும், உயிா் இழப்பாலும் தங்கள் நிறுவனங்கள் மூடப்பட்டதாலும் பொது மக்கள் மிகுந்த வறுமை நிலையில் உள்ளனா்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டண உயா்வு மேலும் மக்களை பீதியடையச் செய்கிறது. எனவே, சொத்து வரியை சராசரியாக கடந்த ஆண்டில் இருந்து 10 சதவீதம் அதிகரிக்கலாம். வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் இலவசமாக கணக்கீடு செய்வதை மாற்றி, 300 யூனிட் இலவசமாக கணக்கீடு செய்ய வேண்டும்.
தூத்துக்குடி மாநகர மக்கள் சுகாதாரம், வியாபாரம், வேலைவாய்ப்பு, பணப் புழக்கம் பெற ஸ்டொ்லைட் காப்பா் ஆலையை மீண்டும் திறக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் தொடா் போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றாா்.
இந்த சந்திப்பின்போது, மாவட்டத் தலைவா் தாளமுத்து, மாவட்ட பொருளாளா் முத்து, துணைத்தலைவா் எபனேசா், மாநகர தலைவா் லிங்க செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.