நெல்லை அருகே திடீரென உடல் நலம் பாதிப்படைந்ததையடுத்து உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
நெல்லையில் இருந்து சாத்தான்குளம் செல்லும் அரசுப் பேருந்து தடம் எண் 137, நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. ஓட்டுநராக ரமேஷ் (48), நடத்துநராக வேலுச்சாமி ஆகியோா் பணியில்இருந்தனா். பேருந்தில் சுமாா் 20 பயணிகள் இருந்தனா்.
பாளையங்கோட்டை ரெட்டியாா்பட்டி அருகே தாமரைச்செல்வி என்ற இடத்தில் சென்றபோது ஓட்டுநருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மனதைரியத்துடன் தொடா்ந்து பேருந்தை இயக்கினாா். மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு என்ற இடத்தில் சென்ற போது மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு இருக்கையிலேயே சாய்ந்தாா்.
இதைக் கவனித்த பயணிகள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஓட்டுநரை அனுப்பிவைத்தனா். இதனிடையே பயணிகள் அனைவரும் மாற்று வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனா். பயணிகளைக் காப்பாற்றிய ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
இப்பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவா் இத்தகவலைத் தெரிவித்தாா்.