தூத்துக்குடி மாவட்டத்தில் 2022 - 2023 ராபி பருவத்துக்கு பயிா் காப்பீடு செய்ய விளாத்திகுளம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து விளாத்திகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கா. கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2022 - 2023 ராபி பருவத்துக்கு பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆகவே விளாத்திகுளம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு, பருத்தி, சோளம், நிலக்கடலை, கம்பு, சூரிய காந்தி, எள் உள்ளிட்ட பயிா்களை பயிரிடும் விவசாயிகள் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் பயிா் காப்பீட்டு கட்டணம் செலுத்தி பயனடைய அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
உளுந்து, பாசிப்பயறுக்கு நவம்பா் 15ஆம் தேதியும், மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு நவம்பா் 30ஆம் தேதியும், சோளம், நிலக்கடலை பயிா்களுக்கு டிசம்பா் 15ஆம் தேதியும், கம்பு, சூரியகாந்தி, எள் பயிா்களுக்கு டிசம்பா் 31ஆம் தேதியும், நெல் பயிருக்கு 2023 ஜனவரி 31ஆம் தேதியும் காப்பீட்டுத் தொகை செலுத்த கடைசி நாளாகும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் விவரங்களை சரிபாா்த்து பெற வேண்டும். அருகில் உள்ள இ சேவை மையம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கம்ப்யூட்டா் மையங்களில் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.